பாசுரங்கள்

திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த
பெரியதிருமொழி
7ம் பத்து 4ம் திருமொழி
1578
கண்சோர வெங்குருதி வந்திழிய
        வெந்தழல்போல் கூந்தலாளை
மண்சேர முலையுண்ட மாமதலாய்
        வானவர்தம் கோவே என்று
விண்சேரும் இளந்திங்கள் அகடு உரிஞ்சு
        மணிமாட மல்கு
செல்வத் தண்சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின்
        என் தலைமேலாரே
கண்கள் சுழன்று சோரவும், வெப்பக் குருதி வெள்ளம் வெளிப்படவும், தீத்தழல்போல் சிவந்த கூந்தலுடைய பூதனையின் முலைப்பாலை குடித்து மடியச்செய்த பச்சிளம்பிள்ளையே ! வானவர் தலைவனே ! வானில் திரியும் இளம்பிறை வயிற்றைத் தொடும் மணி மாளிகைகள், செல்வம் வாய்த்ததுமாகிய திருச்சசேறை எம் பெருமானைத் தோழுவர்தம் திருவடிகளைத் தலைமேல் ஏற்பேன். 

 1579
அம் புருவ வரி நெடுங்கண்
        அலர்மகளை வரை அகலத்து அமர்ந்து
மல்லல் கொம்புருவ விளங்கனி மேல்
        இளங் கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண்சோலை
        வண்சேறை வானுந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார்
        எப்பொழுதும் என்மனத்தே இருக்கின்றாரே
அழகிய புருவத்துடன் நீள்விழிகளும் உடைய மலர்மகளைத் தனது திருமார்பில் வைத்தவன், தழைத்த கிளைகளில் விளங்கனிகளின் மேலே இனங்கன்றைக் குறுந்தடியாக எறிந்தவன், மணம் பரவியும் குளிர்ந்த சோலைகள் சூழும் திருச்சேறை திருக்கோயிலில் வாழ்கின்ற பெருமானுடைய திருவடிகளைத் தொழுவார்கள் எல்லோரும் எப்போதும் என் மனத்தில் வாழ்கின்றார்கள்.

1580
மீதோடி வாளெயிறு மின்னிலக
         முன் விலகும் உருவினாளை
காதோடு கொடி மூக்கு அன்றுடன் அறுத்த
         கைத்தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும்
         தண்சைற எம்பெருமான் தாளை ஏத்தி
போதோடு புனல்தூவும் புண்ணியரே
         விண்ணவரின் பொலிகின்றாரே
மேலே ஓங்கிய கோரைப்பல் மின்னலாய் ஒளிவிட, எதிரில் நிற்போர் அஞ்சி ஓடும் உருவுடைய சூர்பணகையைச் செவியோடு மூக்கையும் அறுத்துவிட்ட கைகளையுடைய இராமனே ! பூந்தாது கிண்டும் வண்டுகள் ஒலிக்கும் திருச்சேறை எம்பெருமானது திருவடிகளைப் போற்றி, மலர்களையும் புனித நீரையும் பரிமாறும் நல்வினைப்பேறு வாய்ந்தவர்கள் விண்ணவராய் விளங்குகின்றனர். 

 1581
தேராளும் வாள அரக்கன்
        தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழ
போராளும் சிலையதனால்
        பொருகணைகள் போக்குவித்தாய் என்று
நாளும் தாராளும் வரைமார்பன்
        தண்சேறை எம்பெருமான் உம்பராளும்
பேராளன் போ் ஓதும் பெரியோரை
        ஒருகாலும் பிரிகிலேன
தோ் நடத்த வல்லவனும் வாளை ஏந்தியவனுமான இராவணனின் இலங்கையைக் போரில் வில்லை ஏந்திக் கொடிய அம்புகளை ஏவி அழித்த இராமனே ! திருத்துழாய் மாலையுடன் விளங்கும் திருமார்புடையவனே, மேலுலங்களையும் காக்கும் பெருமையுடைய திருச்சேறை எம்பெருமானுடைய திருப்பெயர்களை ஓதிப் போற்றும் பெரியோர்களைக் கணப்போதும் நான் பிரியமாட்டேன். 

 1582
வந்திக்கும் மற்றவர்க்கும்
        மாசுடம்பின் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி உருவாய்
        இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச்சோலைத்
        தண்சேறை எம்பெருமான் தாளை
நாளும் சிந்திப்பார்க்கு என்னுள்ளம்
        தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே
இரணியன் வலிமையை அழித்த பெருமானுக்கே நான் உரியவன். வலிந்து வாது செய்யும் சமணர்க்கும், மற்றும் பெளத்தர்கட்கும் நான் உரியேன் அல்லேன். சந்தனமலர்ப் பொழில்கள் சூழந்த திருச்சேறை எம்பொருமானுடைய திருவடிகளை நாள்தோறும் எண்ணுவார்க்கு என் உள்ளம் தேன் அடர்ந்தது போல எல்லாக் காலமும் இன்புறுகின்றது. 

 1583
பண்டேனமாய் உலகை அன்றிடந்த
        பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணையல்லால்
        துணையிலேன் சொல்லுகின்றேன்
வண்டேந்தும் மலர்ப்புறவில்
        வண்சேறை எம்பெருமான் அடியார் தம்மை
கண்டேனுக்கு இது காணீர்
        என் நெஞ்சம் கண் இணையும் களிக்குமாறே
முன்னர் வராகமாய் உலகைக் குத்தியெடுத்த நீர்மையனே ! உன்னை துதித்துத் தொண்டானேன் நான் : தேவரீர் திருவடிகளே எனக்குக் காப்பு . இவை தவிர வேறு புகலிடம் இல்லை என்று உறுதியாக சொல்லுகிறேன். வண்டுகளைக்கொள்ளும் மலர்ச் சோலை சூழ்ந்த நிலங்களுடைய திருச்சேறையில் உறையும் எம்பெருமானின் அடியார்களைக் கண்ட இப்பேறு, என் கண்களையும் நெஞ்சையும் களிக்கச் செய்கிறது. 

 1584
பைவிரியும் வரியரவில்
        படுகடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்
மைவிரியும் மணிவரைபோல்
        மாயவனே என்றென்றும் வண்டார் நீலம்
செய்விரியும் தண்சேறை யெம்பெருமான்
        திருவடியைச் சிந்தித்தேற்கு
என் ஐயறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம்
        என் அன்புதானே
திருப்பார்கடலிலே திருவனந்தாழ்வான் மேல் கண்வளரும் எளியோனே! என்றும் அருள் படர்ந்த நீலமணி மலை போல் திருமேனித் திருமாலே! பலகாலும் வண்டுகள் அமரும் கருநெய்தல் கழனிகளிலே மலரும் தண்சேறை எம்பெருமானை சிந்திக்கின்றேன். என் ஐம்பொறிகளால் விளையும் அறிவூற்றிப் பெருமானை தனக்கே ஆக்கிக்கொண்டு அடிமைப்பட்டவர்பால் என்னுடைய அன்பும் அடிமைப்படும். 

 1585
உண்ணாது வெங்கூற்றம்
        ஓவாத பாவங்கள் சேரா
மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்
        மென் தளிர்போல் அடியினானை
பண்ணார வண்டு இயம்பும்
        பைம்பொழில்சூழ் தண்சேறை யம்மான் தன்னை
கண்ணாரக் கண்டுருகிக்
        கையாரத் தொழுவாரைக் கருதுங்காலே
வானவரும் நானிலந்தோரும் கிட்டி வணங்கும் மெல்லிய தளிர் திருவடிகளை உடையவனை, வண்டுகள் பண் மலியப் பாடுகின்ற பசுஞ்சோலையுடைய திருச்சேறைப் பெருமானைக், கண்ணாரக் கண்டு வணங்கி, மனமுருகி கைகளைக் குவித்துத் தொழுபவர்களை நினைக்குமளவில், கொடிய செயலுடைய காலன் நம்மை வருத்தமாட்டான். நம்மை துன்புருத்தும் தீவினைகள் நம்மை அணுகமாட்டா. 

 1586
கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால்
        போதொருகால் கவலை என்னும்
வெள்ளத்தேற்கு என்கொலோ
        விளைவயலுள் கருநீலம் களைஞர் தாளால் தள்ள
தேன் மணநாறும்
        தண்சேறை எம்பெருமான் தாளை
நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இதுகாணீர்
        என்னுள்ளம் உருகுமாறே
வயல்களில் முளைத்துள்ள நெய்தல் மலர்களைக் களைந்ததால் மணம் பரவும் திருச்சேறைப் பெருமானது திருவடிகளை நாள்தோறும் மனத்தில் வைத்து நினைப்பவரை எனது மனம் நெகுழும். இப்பேறு எவ்வாறு எனக்குக் கிடைத்தது. நான் இறைவனுக்குரிய உள்ளுயிரை எனது என்று நினைக்கும் கள்வன், வஞ்சக நெஞ்சினன், ஆதலால் துன்பப் பெருங்கடலில் அழுந்தியிருப்பவன். எனக்கும் இப்பேறு கிட்டும்.

 1587
பூமாண்சோ் கருங்குழலார் போல் நடந்து
        வயல் நின்ற பேடையோடு
அன்னம் தேமாவின் இன்னிழலில் கண்துயிலும்
        தண்சேறை யம்மான் தன்னை
வாமான் தோ்ப் பரகாலன்
        கலிகன்றி ஒலிமாலை கொண்டு தொண்டீர்
தூ மாண்சோ் பொன்னடிமேல் சூட்டுமின்
        நும் துணைக்கையால் தொழுது நின்றே
பூச்சூடிய கருங்கூந்தல் பெண்கள் போல் வயல்களிலே அன்னம் பெடையோடு உலாவி, தேமா மரத்தின் குளிர்ந்த நிழலில் உறங்குகின்ற திருச்சேறையில் உறையும் பெருமானைத் தாவிப்பாயும் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி, பகைவர்களை வெல்லும் கலிகன்றி ஆழ்வார் பாடிய பாடல்களைப் பாடும் பக்தர்களை அழகு மிக்க தூய பெருமானதுத் திருவடிகளின் மேலே கைகளைக் குவித்து வணங்குவீர்.