ஸ்தல வரலாறு

மஹா விஷ்ணுவிற்கு எப்பொழுதும் பிடித்தமானவையும், இவ்வுலக இன்பங்களையும், பேரின்பத்தையும் அளிக்கக் கூடியன ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், ஸ்ரீமுஷ்ணம், வானமாமலை, மேல்கோட்டை, கும்பகோணம், திருவனந்தபுரம், அயோத்தி, பத்ரிநாத், நைமிசாரண்யம் ஸாரக்ஷேத்ரம் ஆகிய பன்னிரெண்டு திருத்தலங்களாகும்.

இத்திருத்தலங்களுக்குள் திருச்சேறை எனும் ஸாரக்ஷேத்ரம் முதல் முதலானது. இத்தலத்தில் வேண்டிய பலன்களை அருளக் கூடிய திருவடியை உடையவரும் இலக்குமியால் மங்களமாக்கப்பட்டு திருமார்பில் முத்துமாலை மற்றும் கெளஸ்துபங்களுடனும் திருக்கரங்களில் சங்கு சக்கரம், செந்தாமரை, கதை ஆகியவற்றை ஏந்தியும், முகில் வண்ணனும், முழு நிலவு போன்ற முகத்தவனும், அழகான மகுடத்தை உடையவருமான ஸ்ரீ ஸாரநாதப் பெருமாள் பஞ்ச லக்ஷமியுடன் எழந்தருளியிருக்கின்றார் 

புராண வரலாறு

திருச்சேறை என்ற க்ஷேத்ரத்தில் ப்ருகு, மார்க்கண்டேயம், செளனகம், ருத்ரம், ப்ரஹ்மம், ரோமசம், ஸாரம் ஆகிய எல்லா பாவங்களை அழிக்கக்வல்ல ஏழு தீர்த்தங்கள் உள்ள ஸார புஷ்கரணி ஆகும். திரேதா யுகத்தின் முடிவில் மஹா விஷ்ணு பிரும்மாவை அழைத்து இதில் மண் எடுத்து வந்து கும்பம் செய்து எல்லா வேதங்களையும் சாஸ்திரங்களையும் ஆவாஹனம் செய்து அடுத்த யுகத்திற்கு எடுத்து செல்லவும் எனப் பணித்தார்.

ப்ரும்மாவால் நிறுவப்பட்ட கும்பம் உள்ள க்ஷேத்திரம் கும்பகோணம் என்ற பெயர் பெற்றது. பிரும்மா மண் கொணர்ந்த இடம் ஸாரக்ஷேத்ரமாகும். ப்ருகு, செளனகர், வ்யாஸர், மார்க்கண்டேயர், பராசசரர் போன்ற சிறந்த முனிவர்கள் ஸாரபுஷ்கரணியின் கரையில் வாழ்கின்றனர். கருடனும், ஆதிசேஷனும் என்றும் இந்தத் தீர்த்தத்தைக் காத்துக் கொண்டிருக்கின்றனர். மார்கண்டேய முனிவருக்கு முக்தி அளித்துதும் இந்த தலத்தில்தான. என்பது சிறப்பம்சமாகும். 

காவிரிக்கு அருளல்

முன்காலத்தில் விந்தியமலைச் சாரலிலிருந்து எல்லா ஆறுகளும் உற்பத்தியாயின. ஒருசமயம் எல்லா ஆறுகளும் பெண்கள் உருவில் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அங்கு விச்வாவஸு எனப்பெயர் பெற்ற கந்தர்வன் வந்து , அடக்கத்துடன் கை கூப்பி வணங்கிவிட்டு தெற்கு நோக்கிச் சென்று விட்டான். அப்போது அந்த ஆறுகளுக்கு இடையில் யாரை வணங்கினான் என்று ஒரு பெரும் விவாதம் ஏற்பட்டது. இதுபற்றி விச்வாவஸவிடமே அவர்கள் கேட்க, அவரும் ஆறுகளிற் சிறந்தது எதுவோ அதைத்தான் நான் வணங்கினேன், எனக் கூறி வடக்கு நோக்கிச் சென்று விட்டான். சில ஆறுகள் தான் வணங்கப்படவில்லை என்று ஓதுங்கி விட்டன. ஆனால் கங்கைக்கும், காவிரிக்கும் நடுவில் விவாதம் ஓயவில்லை. கடைசியில் அவர்கள் பிரம்மரிஷியை கேட்க அவரும் திரிவிக்ரமனது திருவடித் தாமரைகளைக் கழுவும் பாக்யம் பெற்ற கங்கை ஆறுதான் மிகச் சிறந்தது என கூறினார்.
 
பிறகு காவேரி, நான்முகனைப் பார்த்து ஆயிரம் தேவ வருடங்கள் தவமிருந்து கங்கைக்கு மேலான சிறப்பை தர வேண்டும் என வேண்டினார். ப்ரஹ்மாவும் காவேரியிடம் கங்கைக்கு மேலான சிறப்பை மஹா விஷ்ணு ஓருவராலாயே தர இயலுமாதலால் எல்லா பாபங்களையும் அழிக்கவல்ல ஸார புஷ்கரணியின் கரையில் தவம் இருந்தால் மஹா விஷ்ணுவின் அனுக்கிரகத்தால் வேண்டிய வரம் கிடைக்கும் என கூறினார்.
 
காவேரியும் ஆயிரம் தேவ ஆண்டுகள் தவம் செய்து முடியும்போது குழந்தை உருவத்தில் ஸ்ரீஹரி தோன்றி காவேரிக்கு
  • ஸார க்ஷேத்திரம் சோ்ந்து, ஸார புஷ்கரணியில் நீராடி யார் யாரெல்லாம் உன்னை அர்ச்சிக்கிறார்களோ, அவர்கள் அனைவர்க்கும் முக்தியை அடைவார்கள்.
  • தென்னகத்தில் கங்கைக்கு மேலான சிறப்பை காவிரி அடைவாள் எனவும் வரமளித்தார். காவேரியும் கங்கைக்கு மேலான பெருமையைப் பெற்று இன்றும் இத்தலத்தில் ஹரியை ஆராதித்து வருகிறாள். 


    திருக்கோயில் சிறப்பு

    இக்கோயிலின்
  • பெருமாள் சாரநாத பெருமாள்,
  • தாயார் சாரநாயகித் தாயார்,
  • விமானம் சாரவிமானம்
  • குளம் சாரபுஷ்கரணி
  • ஊர் சாரக்ஷேத்ரம்
அதனால் இத்திருத்தலம் பஞ்ச சாரக்ஷேத்ரம் என்று அழைக்கப்படுகின்றது.
 
திருக்கோயிலின் அமைப்பு

கிழக்கு நோக்கிய இத் திருக்கோயில் 116 மீட்டர் நீளமும் 72 மீட்டர் அகலத்துடன் 22 மீட்டர் உயரமுள்ள ராஜகோபுரத்துடன் இரண்டு பெரிய பிராகரத்துடன் இருக்கின்றது. கோயிலின் முன்பாக இதே நீள அகலத்திற்கு திருக்குளமும் அமைந்திருக்கின்றது.
 
சாரநாத பெருமாள் மற்றும் சாரநாயகித் தாயாருக்கு தனித்தனியாக சந்நதிகள் உள்ளன. மூலவர் பெருமாள் நின்ற திருக்கோலம். உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி நீளாதேவி மார்பில் லக்ஷ்மி மற்றும் மாமதலைபிரான் ஆகியோருடன் நின்ற திருக்கோலம்.
 
இத்துடன் வேணுகோபாலன், இராமர், ௭ம்பெ௫மானார், மற்றும் மணவாளமாமுனிகள் சந்நதியும் உள்ளன. ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கு தனியாக மூலஸ்தானம் இருப்பது இத்தலத்தில் விசேஷமாகும். திருக்குளக்கரையின் தென் மேற்கில் காவிரித் தாயாருக்கும் தேரடியில் மேற்கு நோக்கி கைகூப்பிய புஷ்கரணி ஆஞ்சநேயருக்கும் தனியாக சந்நதிகள் இருக்கின்றன. 

பூஜா காலங்கள்

இக்கோயிலில் தென்னாச்சார்ய சம்பிரதாயப்படியும் பாஞசரார்த்ர ஆகமப்படியும் பெருமாள் தாயார் மற்றும் ஆழ்வார்களுக்கு தினசரி தளிகையுடன் ஆறு கால பூஜை நடைபெருகின்றது.
 
பிரம்மோத்ஸவம்

ஸ்ரீஹரி காவிரிக்கு தைமாதம் பெளர்ணமி கூடிய பூச நட்சத்திர குருவாரத்தன்று தோன்றி வரம் அளித்ததால் வைணவத்தலங்களில் இத்தலத்தில் மட்டுமே தை பூசத்தன்று தேராட்டம் நடைபெருகின்றது. இதற்கு முன்பாக முதல் எட்டு நாட்களுக்கு கொடியேற்றத்துடன் தினம் காலையில் பல்லக்கிலும் மாலையில் எல்லா வாகனத்திலும் வேத மற்றும் திவ்யப்பிரபந்த கோஷ்டியுடன் புறப்பாடும் ஒன்பதாம் நாள் தை பூசத்தன்று பெரிய தேராட்டமும் அதன் பிறகு பத்தாம் நாள் துவாதச ஆராதனையுடன் பிரம்மோத்ஸவம் முடிவடைகின்றது.

இது அல்லாமல், அக்ஷயதிருதியை அன்று காலை கருடசேவை , ஆடி ஜ்யேஷ்டாபிஷேகம் மற்றும் அதன் மறுநாள் 108 கலச திருமஞ்சனம், நடைபெருகின்றன. புரட்டாசி நவராத்திரி உற்சவம், மார்கழியில் பெருமாளுக்கு 20 நாட்களுக்கு அத்யயன உற்சவங்களும் நடைபெருகின்றன.

இத்துடன் பெருமாளுக்கு மாத பக்ஷ பஞ்சபருவ உள் பிரகார புறப்பாடுகளும் தாயாருக்கு வெள்ளிக் கிழமைகளிலும் பிரகார புறப்பாடுகளுடன் ஊஞ்சல் சேவை உண்டு. மேலும் சித்திரையில் ஐந்து நாட்களுக்கு எம்பெருமானார் உற்சவமும், ஐப்பசியில் பத்து நாட்களுக்கு மணவாள மாமுனிகள் உற்சவமும் நடைபெருகின்றன.